Tuesday, April 15, 2008

ஆரிய சூழ்ச்சி- கவிஞர் கண்ணதாசன்

ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னித் தாயக எல்லை தொட்டனர்;
மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்
மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்
கோட்டை வாசற் படியை மிதித்தனர்;
சொந்தமாக ஓர் நாடி லாதவர்
தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடுமதம் சொந்த நாடென
ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர்
சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்
வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!
நச்சரவுகள் மனித மேனியில்
நடமிடும் கதை இவர்கள் கதையாம்
அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்
அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!
அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர்
அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து, இப்
படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!
பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!
மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!
வீரர் தேயமாம்! கேள்வி யுற்றனம்!
எனில் உமக்கொரு தெய்வம் இல்லையாம்!
என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!
என்றதும் தமிழ் ஏறு கூறுவன்;
ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!
எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்
என்றுகூற அவ்வீணர்கள் யாவரும்
எழுதபதாயிரம் கடவுள்கள் கூறி, அக்
கடவுள் யாவரும் வானில் உண்டெனக்
கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட!
பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே
புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்
சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!
சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!
கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!
கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!
வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்
தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!

நன்றி- "விடுதலை"- 15-4-2008, தமிழ் ஓவியா

No comments: